Tuesday, December 11, 2007

மூடநம்பிக்கையை மூலதனமாக்கி...

இன்றைய காலகட்டத்தில் எய்ட்ஸைவிட வேகமாக சாதி, மதப் பேதமின்றி குடிசைவாழ் குப்புசாமியிலிருந்து மாடிவீட்டு மல்கோத்ரா வரை பரவி வரும் ஒரு கொடிய நோய் மூடநம்பிக்கைதான். இதற்குக் காரணம் ‘குறுக்கு வழியில் பணத்தைத் தேடும் திருட்டு உலகமடா…’ என்பதற்கேற்ப மக்கள் குறுக்கு வழியில் பலன்களை அடைய நினைப்பதுதான்.

மக்களின் இந்த மூடநம்பிக்கையே அவர்களது பலவீனமும்கூட. மக்களின் இந்தப் பலவீனத்தையே மூலதானமாக்கி தங்களது வாழ்க்கை நிலையை உயர்த்திக் கொள்வதற்காக நமது சமுதாயத்தில், பார்த்தீனியம் செடிபோல் மானவாரியாக முளைத்து வருபவர்கள்தான் போலிச் சாமியார்களும் சோதிடர்களும்.

‘பூனை குறுக்கே வந்தால் சகுனம் சரியில்லை.’ என்கிறார்கள். ஏன்? நாய், பசு போன்று அதுவும் ஒரு பிராணிதானே. அது மட்டும் என்ன மனிதனுக்கு கேடுவிளைய வேண்டும் என்று விரதம் இருந்து வேள்வியா நடத்துகிறது! இந்தப் பூனைக் குறுக்கே வந்தால்…. இதற்கு ஒரு கதையே உண்டு. அதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

முன்பெல்லாம் குருகுல கல்விதான் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மாணவர்கள் அந்த குருகுலத்தில் தங்கியிருந்து படித்தார்கள். (கட் அடிப்போம். கலர் பார்ப்போம் கதையெல்லாம் இங்கே நடக்காது.) அப்படி ஒரு குருகுலத்தில் குரு மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டு இருந்தார். அவர்கள் வளர்த்த பூனை ஒன்று ஒருநாள் குருவுக்கும் மாணவர்களுக்கும் நடுவிலே நடந்து சென்றது. இதனால் சில நிமிடங்கள் மாணவர்களின் கவனம் குரு நடத்தும் பாடத்தில் செல்லாமல் பூனையிடம் சென்றது. இதே போல் மறுநாளும் பாடம் நடத்தும் வேளையில் பூனை குறுக்கே நடக்க மாணவர்களின் கவனம் சிதறியது.

அடுத்த நாள் அதே நேரத்தில் மாணவர்கள் ‘நீ வருவாயா…’ என்று பூனையின் வரவுக்காகக் காத்திருக்க ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தார் குரு. ‘பாளாய்ப போன பூனையால் பாடம் நடத்துவது தடைபடுகிறதே. இனிமேல் இந்தப் பூனை இப்படிக் குறுக்கே வந்தால் காரியம் கெட்டுவிடும். மாணவர்கள் ஒழுங்காகப் பாடத்தில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதற்கு ஒரு முடிவு செய்யவேண்டும்’ என்று நினைத்தார்.

மறுநாளிலிருந்து பாடம் நடத்தும் வேளைகளில் ‘வாராய் நீ வாராய்’ என்று அந்தப் பூனையைப் பிடித்து கட்டிப்போட்டு விட்டார்.
இந்தப் பூனை குறுக்கே வந்த கதையைத்தான் திரியாக்கிப் பற்ற வைத்து பந்தமாக எறியவிட்டு கடைசியில் சகுனமாக்கி விட்டார்கள்.

திரைப் படங்களும் தொலைக்காட்சித் தொடர்களும் வன்முறையை வளர்ப்பதற்கு எப்படி வழி செய்கிறதோ அதே போல் மூடநம்பிக்கையையும் உரம் போடாமல் மக்கள் மனதிலே மணிபிளாண்ட்போல் வளர்த்து வருவதில் தனது பங்கைச் செவ்வனே செய்கிறது.

ஒரு பிரபல தொலைக்காட்சியில் பிரபல நிறுவனத்தின் தயாரிப்பில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலத் தொடரில் பல வாரங்களுககும் மேலாக ஒரு பச்சிளம் குழந்தையை மையப்படுத்தி ஒரு காட்சியை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். உடுக்கை அடித்து வெற்றிலையில் மை போட்டுப்பார்த்துஇ பச்சிளங் குழந்தையைப் பலி கொடுத்தால் புதையல் கிடைக்குமாம்!

நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம்!

பழைய மாயாஜாலக் கதைகளில் மனித உயிரைப் பலி கொடுத்து புதையலை எடுக்க முயற்சிப்பதைப் பற்றிப் படித்திருக்கிறோம். ஆனால் எந்தக் கதையிலாவது எந்த மந்திரவாதியாவது புதையலை எடுத்து அதன்பின்பு ‘பொன் மகள் வந்தாள்…’ என்று மகிழ்ச்சியாகப் பாடி ஆடி பல நூறு வருடங்கள் வாழ்ந்தான் என்று படித்திருக்கிறோமா?

மண்ணெல்லாம் அளந்து முடித்து விண்ணிற்கு உல்லாசப் பயணம் சென்று கொண்டிருக்கும் இந்த நவீன யுகத்தில் இப்படியொரு உடுக்கை ஜோசியம் அவசியம்தானா?

‘மகாஜனங்களே! யோசித்துப் பாருங்கள். உட்கார்ந்து யோசியுங்கள். நின்று கொண்டு யோசியுங்கள். கழிவறைத் தனிமையில் உட்கார்ந்து யோசியுங்கள். அம்மா யோசியுங்க. அய்யா யோசியுங்க.’ என்று கவுண்டமணிபோல் தொண்டை எலும்பு தெறிக்க கத்தினாலாவாது இந்த மூடநம்பிக்கையில் மூழ்கிக் கிடப்பவர்கள் சிந்தித்துப் பார்ப்பார்களா?

நான்கு தெருவுக்கு ஒரு சோதிடரும் நாலு ஊருக்கு ஒரு சாமியாரும் காணப்படுகிறார்கள். சிலர் தும்மல் வந்தால்கூட மஞ்சள் பையில் சாதகத்தைத் திணித்துக் கொண்டு சோதிடர் வீட்டுக் காலிங் பெல்லை அழுத்திவிடுவார்கள். சிலர் காலையில் எழும்பும்போது மனைவி முகத்தில் விழிப்பதா? வேலைக்காரி முகத்தில் விழிப்பதா? என்று தனது ஆஸ்தான சோதிடரிம் ஆலோசனைக் கேட்டுத்தான் கண்ணை விழிக்கிறார்கள்.

கற்பூரச் சாமியார், சாம்பிராணிச் சாமியார், ஊதுவத்திச் சாமியார் என்று ஏகப்பட்ட சாமியார்கள் இருக்கிறார்கள். இப்பொழுது பீர் சாமியார், பிராந்திச் சாமியார் என்று மதுரசப் பெயர்களைக் கொண்டவர்கள் காவிகட்டி நெற்றி நிறைய நீரு பூசி ‘எங்கேயும் எப்போதும்…’ என்று பாடித் திரிய ஆரம்பித்து விட்டார்கள் நம்ம பழனிச் சாமியார்போல்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பற்றித் தெரிந்து கொண்டால் மற்றவர்களும் எப்படி மக்களுக்குக் கற்பூரம் காட்டி மயக்குகிறார்;கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்தக் கற்பூரச் சாமியாரைப் பார்ப்பதற்காக நம்ம பாப்பாபட்டி ராமசாமி இடைநில்லாப் பேருந்தில் ஏறி ஒரு நகரத்தில் இறங்கி அங்கிருந்து சிற்றுந்தில் ஏறி ஒரு கிராமத்தைத் தாண்டி ஒற்றையடிப்பாதைச் செல்லும் இடத்தில் இறங்கினார். அந்த இடத்திற்குப் பெயர் ‘கற்பூரச் சாமியார் விலக்கு.’ (பேர் ஃபேமஸ் ஆயிடுச்சில்ல. பேரு வச்சிர மாட்டோமா என்ன!)

ஓற்றையடிப்பாதை சாமியாரிடம் குறிகேட்க வந்த கேணையர்களால் (தன்னை நாடி வருபவர்களுக்கு சாமியார்கள் வைக்கும் பெயர் இப்படித்தான்) கார்செல்லும் பாதையாக மாறியிருந்தது.

சாமியாரின் வாசஸ்தலம் அருகே ஒரு கடை இருக்கும். அங்கே சாமியாரைச் சந்திக்க வருபவர்களின் நலன் கருதி டீயிலிருந்து டிபன் வரை விற்கப்படும். இருபது ரூபாயக்கு கற்பூரம் வாங்கிக் கொண்டு சென்றால்தான் சாமியாரைச் சந்திக்க முடியும். (அந்தக் கற்பூரம் மீண்டும் கடைக்கே வந்து சேர்ந்துவிடும் என்ற ரகசியம் கடைக்கார வெள்ளச்சாமிக்கும் கற்பூரசாமியாருக்கும் உள்ள ஜென்டில்மேன் அக்ரிமென்ட்)

சாமியாரை என்ன அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியுமா! காத்திருந்து காத்திருந்து காலமும் நேரமும்தான் போய்க் கொண்டிருக்கும். சாமியார் அடையாளம் சொல்லி அழைக்கப் படுபவர்கள்தான் அவரைச் சந்திக்க முடியும்.

மற்றவர்களெல்லாம் ஒரு நாள் அல்லது ஒரு வாரம் என்று சாமியாரிடமிருந்து அழைப்பு வரும்வரைக் காத்திருக்க வேண்டும். சரி காத்திருந்து காத்திருந்து நாவரண்டு விட்டது என்று டீ சாப்பிட கடைக்குச் சென்றால் அங்கே சாமியாரின் கையாள் கடைக்கார வெள்ளச்சாமி டீயைக் கொடுத்து பணத்தையும், வாயைக் கொடுத்து மனதிருப்தையும் வாங்கி விடுவான்.

அவனருகில் அப்பாவியாக நின்று கொண்டிருக்கும் கைத்தடிகள் விஷயத்தைச் சேகரித்து, சாமியாரிடம் சரியாகச் சேர்த்து விடுவார்கள். குறிகேட்க வந்திருக்கும் கூட்டத்தில் அமர்ந்த்திருக்கும் நம்ம ராமசாமி ‘சாமியார் நம்மளைக் கூப்பிட மாட்டாரா’ என்று ஆவலோடு காத்திருக்கும் நேரத்தில் ஒருவன் உள்ளேயிருந்து வந்து

“இங்கே பச்சைச் சட்டை போட்டவன், தென்கிழக்குத் திசையிலிருந்து மகளின் கல்யாணக் காரியமாக வந்திருப்பவன் யார்.” என்று கேட்டவுடன் ராமசாமிக்கு இதயமெல்லாம் பளிச் பளிச்சென்று சீரியல் பல்புகள் கலர் கலராக எரிய ஆரம்பித்துவிடும்..

'ஆகா என்ன அற்புதம்! எவ்வளது லெக்கா (கிராமத்தில் அடையாளம் காணுதல் என்பதற்கு பேச்சு வழக்காக லெக்கு என்று சொல்வார்கள்.) சொல்லி கூப்பிடுறாரு!’ என்று பூரித்தப் போய் சாமியாரைக் காணச் செல்வார். (இப்படிப்பட்ட பூரிப்பான மனநிலையில்தான் பலர் தனது சொத்து, நகை, பணம் என்று சாமியார்களுக்குத் தாரை வார்த்துவிட்டு பின்பு தாரை தாரையாகக் கண்ணீர் வடிக்கிறார்கள்.)

இந்த ராமசாமி மூலமாக கற்புரச் சாமியாரின் புகழ் பாப்பாபட்டி மட்டமல்ல அதைச் சுற்றியுள்ள பத்துப் பட்டிக்கும் றெக்கை கட்டி பறந்து விடும். அப்புறம் என்ன! எண்பது கிலோ உடம்பில் ஐம்பது கிலோ தொப்பையைச் சுமந்து கொண்டு நம்ம காவல்துறை வீரர்கள் சாமியாரைத் தேடி வந்து பிடிக்கும் வரை அவர் காட்டில் பொன்மழையும் பெண்மழையும் மாதம் முப்பது மாரியாய்ப் பொழிந்து பொண்டிருக்கும்.

இந்தக் கற்பூரச் சாமியார் செய்யும் உத்திகளைத்தான் பெரும்பாலான சாமியார்கள் கையாண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள். இப்படிப் பட்ட சாமியார்கள் எல்லாம் தொலைக்காட்சி நடிகர்கள்போல் என்றால் பெரிய திரை நடிகர்கள்போல் நாட்டையே ஏமாற்றும் சாமியார்களும் இருக்கிறார்கள்.
கடவுளை அமர்த்த வேண்டிய இடத்தில் இவர்கள் அமர்ந்து கொண்டு ‘தாங்கள் கடவுளின் அவதாரம்’ என்கிறார்கள். இதை நம்பியவர்கள் அவர்களுக்குப் பாதபூஜை செய்து பல இலக்க பணத்தை அள்ளி வழங்கி சாமரம் வீசி லாலி பாடுகிறார்கள். கேட்டால் இது கடவுளுக்குச் செய்யும் சேவை என்கிறார்கள்.

இந்தக் கடவுளின் அவதாரங்களுக்கு சுனாமிகளையும் சூறாவளிகளையும் ஏன் முன்பே கண்டு சொல்ல முடியவில்லை. இல்லை ஏன் நிறுத்த முடியவில்லை! இவர்களால் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியுமா? இவர்களால் எதுவும் முடியாது. காரணம் சாமியார் என்ற முகமூடி அணிந்து சமுதாயத்தை ஏமாற்றும் இவர்களில் பலரும் சமூகவிரோதிகள் என்ற தீவிரவாதிகள் போன்றவர்கள்தான்.

(மீண்டும் மேலே சொன்ன கவுண்டமணி டயலாக்கை இந்த இடத்தில் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.)

நான்கு செருப்புத் தேய நடையாய் நடந்து நம்மிடம் வாக்குகளை வாங்கி வெற்றி பெற்று ஆட்சிபீடத்தில் அமரும் அரசியல்வாதிகள் கூட இதுபோன்றவர்களிடம் ஆசிபெற்று அரசியல் நடத்தும் நிலை ஏற்படுகிறது. இந்த அரசியல்வாதிகள் மக்களுக்குச் செய்யும் சேவைகளைவிட இதுபோன்ற சாமியார்களின் பாதங்களுக்குச் செய்யும் சேவைகள் அதிகம்.

அரசியல் வாதிகளிடம் மூடநம்பிக்கை அதிகம் என்பதை சமீபத்தில் கர்நாடக முதல்வராக மிகவும் குறுகிய காலம் மட்டும் பதிவியிலிருந்த மனிதர் விட்ட அறிக்கை உணர்த்தும். (இவர் பதவியில் நீடிக்கக் கூடாது என்று ஏவல் வைக்கப் பட்டதாம்)

என்ன கொடுமை சார் இது!! இன்னொரு வீரப்பன் வந்து இவர்களைப் போன்றவர்களைக் கடத்திக் கொண்டு போனால்தான் இவர்களிடமிருந்து மக்கள் தப்பிக்க வழி கிடைக்கும்.

உழைத்துக் கிடைக்கும் பலனைவிட குறுக்கு வழியில் கிடைக்கும் பலனையே அதிகம் எதிர்பாhக்கிறார்கள் மனிதர்கள். அதனால்தான் இந்த ஏமாற்று வேலைகளும் தங்கு தடையில்லாமல் எஃப் எம் வானொலிபோல் எல்லா இடங்களிலும் பயணம் செய்து கொண்டிருக்கிறது.

மாறுமா சமுதாயம்? மாறாது ஆசையில்லா மனிதர்களாக அனைவரும் மாறும்வரை!!!!!. மனிதர்களே மனிதர்களை ஏமாற்றாதீர்கள்.
மரணத்திற்குப் பின்பு நீங்களும் தெய்வமாகலாம்.

கனிஷ்கா. தென்காசி.

Wednesday, November 14, 2007

மனித உயிர் மகத்தானதா? மலிவானதா?

இன்று நாமெல்லாம் ஒட்டு மொத்தமாகப் புலம்பிக் கொண்டிருக்கும் பொதுவான விஷயம் தமிழ்ப் பண்பாடு மாறிக்கொண்டு வருகிறது.
இந்தியக் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது என்பதுதான். ஆனால் உலகமெங்கும் இன்று நல்ல குணங்கள், நல்ல பண்புகள், மனிதநேயம், மன்னிக்கும் தன்மை இவையெல்லாம் மிகவும் குறைந்து வருவதை நாம் உணரமுடிகிறது.

நல்ல காரியங்கள் நான்கு நடக்குமுன்பு நாற்பது தீய காரியங்கள் மிகவும் வேகமாக நடந்தேறிவிடுகின்றது. அதுவும் வெட்டுவது குத்துவது என்பதெல்லாம் சர்வ சாதாரண விஷயமாகிவிட்டது. நாய் சேகர் மாமா மாதிரி ‘எல்லோரும் கேளுங்கள். நான் கொலை செய்யப் போறேன். கொலை செய்யப் போறேன்.’ என்று அறிவிப்பு செய்து நடத்தும் நிகழ்ச்சியாகி விட்டது. அப்படியென்ன மனித உயிரின் மதிப்பு மலிவாகிவிட்டதா?

இப்படிக் கொடூர நிகழ்ச்சிகள் நடக்கும் சமயத்தில் அந்தப்பகுதியில் பார்த்தால் ‘என்ன கொடுமை சார் இது’ என்று ஆதங்கம்படும் அஹிம்சாவாதிகளாக நிறையப் பேர் மாறிவிடுவார்கள். ஆனால் மறுநாள் அதே அஹிம்சாவாதிகள் ‘நாட்டில் இதெல்லாம் சகஜமப்பா..’ என்று (ஏதாவது சொல்லி தனது தலைக்கு ஆபத்து வந்துவிடக்கூடாதே) கையை வீசிக்கொண்டு காரியத்தைப் பார்க்கப் போய்விடுவார்கள்.
இப்படி சமுதாயத்தில் எந்த தீய செயல்கள் நடந்தாலும் பாவப்படுவதும் பரிதாபப்படுவதுமே இந்த சமூகத்தினரின் கடமையாகிவிட்டது. இப்படிப்பட்ட செயல்கள் ஏன் நடக்கிறது? என்று சிந்தித்துப் பார்க்க யாரும் விரும்பவில்லை.

சமுதாயம் என்பதில் நாம் எல்லோரையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது. வேலை வெட்டியின்றி வீண் விவாதங்களில் ஈடுபடும் ஒரு சமூகம் இருக்கிறது. இதற்காக பல நாடுகளில் பல நிறுவனங்கள் ஒரு குழுவை அமைத்து அவர்களை விவாதிக்கச் செய்து அதை தொலைக் காட்சியிலும் ஒளிபரப்புவார்கள். அந்த விவாதங்கள் பெரும்பாலும் நடந்து முடிந்த நிகழ்ச்சிகளைப் பற்றியதாகத்தான் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு இப்படி விவாதத்திற்கு வந்த விஷயம் மூன்றாம் உலகப் போர் வருமா? வராதா? அவரவர் நாட்டின் நாணயங்களை விரல் வலிக்கச் சுண்டிப்போட்டு விவாதித்தார்கள். (ஒரு வேளை நாணயம் நட்டுக்கு நின்றிருந்தால்.. அதற்காக தனி ஓவர் டைம் எடுத்து விவாதித்திருப்பார்களோ!.) இந்த விவாதத்தில் நாஸ்டர்டாமின் ஆருடத்தையும் பக்கபலமாக அமர்த்திக் கொண்டார்கள்.

சரி ஒருவேளை நாணயத்தில் தலை விழுந்து இவர்கள் விவாதப்படி மூன்றாம் உலகப்போர் என்ற ஒன்று வருகிறதோ! இல்லையோ! (வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம். மீண்டும் ஒருமுறை பூமித்தாயின் சரீரம் களங்கமடைய வேண்டாமே) இன்று உலகமெங்கும் தீவிரவாதம் என்னும் பேர்வையில் தினம் தினம் போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்று என்ன கொடூரக் காட்சிகளைக் காணவேண்டி இருக்குமோ’ என்று என்ணி காலையில் உதிக்கும் சூரியன்கூட யோசனை செய்துதான் மேலெழும்பி வருகிறது. அதே சூரியன் அந்திவானில் மறையும்பொழுது அந்தச் செவ்வானம் சிவக்கிறதோ இல்லையோ பூமித்தாயின் சரீரம் செந்நிறக் குருதியால் நித்தம் நித்தம் சிவந்து கொண்டல்லவா இருக்கிறது!.

இந்த சமூகத்தைச் சீரழிக்கும் இப்படிப்பட்ட நீசர்களின் கொடூரப் பயணம் எதை நோக்கியது. எந்த தேசத்தை ஆள்வதற்கு? எந்த மக்களை ஆள்வதற்கு? இல்லை இவர்கள் மட்டும் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்துவிடப் போகிறார்களா? இதற்கெல்லாம் விடை அவர்களுக்கே தெரியாது.

ஒரு வேளை லட்சக்கணக்கான உயிர்களைக் கொன்று பல நாடுகளைச் சீரழித்து கொள்ளையடித்து, ‘சக்கரவர்த்திகள்’ ‘மாமன்னர்கள்’ என்று சரித்திரத்தில் இடம் பிடித்தவர்களைப் போல் (இவர்களைக் கொடூரர்களாகச் சித்திகரித்து இருக்கலாம்) இவர்களும் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணுகிறார்களா.

பிடித்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம் திறமை, நேர்மை, உண்மை என்ற நல்ல பண்புகளைவிட பணம் திடமானது. (சரித்திரம் எழுதுபவர்கள் ஜாக்கிரதை. அமெரிக்கர்கள் முதன்முதலில் சந்திரனுக்குச் சென்றது உண்மையா? பொய்யா? என்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டது போல் இந்த சரித்திரமும் சர்ச்சையாகிவிடப் போகிறது. நம்மைவிட நமது சந்ததியினர் உஷார் பார்ட்டிகள்.)

மீண்டும் கேள்விக்கு வருவோம். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா? இதற்காகப் பட்டி மன்றம் வைத்தால் பின்லேடனும் ஜார்ஜ் புஷ்ஷ_ம் ஒரே அணியில் சேர்ந்து விடுவார்கள். எதிரணிக்குத்தான் ஆள் தேட வேண்டும். அந்தப் பொறுப்பை நடுவர் சாலமன் பாப்பையா அவர்களிடம் விட்டுவிடுவோம். ஆனால் தீர்ப்பு மட்டும் ‘மனித உயிரின் விலை விலைவாசியைப் போல் உயர உயரப் பறக்கிறது’ என்பதாகத்தான் இருக்கும். காரணம் கேட்பவர்கள் தொடர்ந்து படியுங்கள்.

சுமார் 5500 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இதுவரை நடந்த யுத்தங்களின் மொத்த எண்ணிக்கை 14500. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 364 கோடி.(இதில் பல லட்ச, சொச்சங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.) இந்த அழிவுக்கான மொத்தச் செலவு 50 லட்சம் கோடிகளுக்கு மேல் என்றால் நாம் அழிவுப்பாதையில் எந்த வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றோம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால் அந்தக் காலத்தில் அதாவது இந்த யுத்தங்கள் நடந்து முடிந்த காலகட்டங்களில், ஒரு வீட்டுக்கல்ல, ஒரு நாட்டுக்கல்ல இந்த உலகம் முழுவதற்கும் ஒரு ஆண்டுக்கு ஆன மொத்தச் செலவே ஒரு லட்சம் கோடிதான் . ஆனால் நம்மை நாமே அழிப்பதற்காக 50 லட்சம் கோடிகளைச் செலவு செய்திருக்கிறோம். வேதனைப்பட வேண்டிய விஷயமல்லவா இது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ரோமாபுரியை ஆண்ட மாமன்னன் ஜூலியஸ் சீசர் தான் நடத்திய யுத்தத்தில் ஒரு எதிரி என்ற பேர்வையில் ஒரு உடன் பிறவா சகோதரனைக் கொல்ல அவன் செலவழித்த தொகை வெறும் 75 பைசாதான். ஆனால் அதற்குப் பின் கி.பி.1800ல் நெப்போலியன் நடத்திய யுத்தத்தில் ஒரு மனித உயிரைக் கொல்ல ஆனச் செலவு ரூ.24000.

முதலாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அமெரிக்கா செலவழித்தது ரூ.168000. அதன் பிறகு நடந்த இரண்டாவது உலகப்போரில் ஒரு மனித உயிரைக் கொல்ல அதே அமெரிக்காவின் செலவு ரூ16 லட்சம். பார்த்தீர்களா! வெறும் 75 பைசா 24000ரூபாயாகி 168000ரூபாயாகி கடைசியில் 16 லட்சமாகிவிட்டது. ஆனால் இன்று இந்தச் செலவு கோடிகளாகிவிட்டது எனலாம்.

இன்றைய குண்டர்களும் கொலைகாரர்களும் தீவிரவாதிகளும் மனித உயிர்களைக் கொல்ல வாங்கும் பணம் பலகோடி ‘பவர்கட்’ ரகசியம். இப்படி நம்மோடு ஒருவராக வாழும் ஒரு சகோதரனைக் கொல்ல வருங்காலத்தில் பல நூறுகோடிகளைக் கூடச் செலவழிப்பார்கள்.

இந்தியாவும் சீனாவும் போட்டி போட்டுக் கொண்டு மக்கள் தொகையை உற்பத்தி செய்து பெருக்குவதுபோல் பல நாடுகளும் அணு ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் உற்பத்தி செய்து குவிக்கின்றன். இவையெல்லாம் யாரைத் தாக்குவதற்காக? எந்த உலகத்தை அடிமைப்படுத்தி ஆள்வதற்காக? எல்லாம் நம்மை நாமே அழித்துக் கொள்வதற்காகத்தான்.

சரி ஒரு வேளை மூன்றாம் உலகப்போர் வருகிறதென்றே வைத்துக் கொள்வோம். கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். என்ன நடக்கும் என்று. இரண்டு சிறு பயல்கள் (லிட்டில் பாய்ஸ் - நாகசாகி, ஹிரோஷிமா) தாக்கிய தாக்குதலே இன்னும் நெஞ்சை உலுக்கிக் கொண்டிருக்கிறது. அந்த தாக்குதலின் சுவடுகள்கூட இன்னும் அழியவில்லை. ஆனால் இப்பொழுது பல நாடுகளும் தடிப்பயல்கள் போல் பெரிய பெரிய அணுக்குண்டுகளை அல்லவா குவித்து வைத்திருக்கிறார்கள்.

ரஷ்யாவில் தயாரித்து வைத்திருக்கும் ஒரு சக்தி வாய்ந்த அணுக்குண்டை வெடித்தால் அதன் அதிர்வு பூமி தன்னைத் தானே ஒருமுறை சுற்றி வருமுன்பு மூன்றுமுறை பூமியைச் சுற்றி வந்துவிடுமாம். ‘இதென்ன பிரமாதம் இதைவிட சக்தி வாய்ந்த அணுக்குண்டை எல்லாம் நாங்களும் வைத்திருக்கிறோம்ல. அதைப் போட்டால் இன்னும் அதிரும்ல’ என்று மனதுக்குள் சில நாடுகள் இறுமாப்புக் கொள்கின்றன.

அப்படி மூன்றாம் உலகப்பேர் வந்து இந்த சக்திமிகுந்த அழிவு சக்திகள் பயன் படுத்தப்படுமேயானால் என்னவாகும். பூமி துளைத்தெடுத்தக்கப்பட்டு சல்லடையாகி, எல்லாம் கரிக்காடாக அல்லவா காட்சியளிக்கும். அதன்பின்பு யார் யாரை ஆளப்போகிறார்கள்?. எந்த உலகத்தை ஆளப்போகிறார்கள்?.

குவிந்து கிடக்கும் சடலங்களுக்குத் தலைவனாக, சுடுகாடு எனும் சாம்ராஜ்யத்திற்கு சக்கரவர்த்தியாக, மனித எலும்புகளை சிம்மாசனமாக்கி, அட்டினக்கால் தோரணை போட்டு இந்த உலகத்தை ஆளப்போகும் அந்த மாமனிதன் யார்?.

அப்படியே இது சரித்திரமானாலும் அதை எழுதுவதற்கோ அல்லது படிப்பதற்கோ மனித உயிர் எதுவும் மிஞ்சியிருக்குமா?

இப்பொழுது சொல்லுங்கள். மனித உயிர் மலிவானதா? மகத்தானதா?

-------- --------- --------- கனிஷ்கா, தென்காசி .