Wednesday, January 16, 2008

உயர உயரப் பறந்தாலும்.....

‘உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.’ என்பது உண்மைதான். ஆனால் இங்கே மனித ஊர்க்குருவிகள் ‘பருந்தாகி விடலாம்’ என்றல்ல ‘படைத்தவனை மிஞ்சிவிடலாம்’ என்றல்லவா கனவு கண்டு கொண்டு இருக்கிறார்கள்!.

உயர உயரப் பறந்து ஊர்வலமாய் விண்ணில் வலம் வந்தாலும் மனிதன் மனிதன்தான். இறைவனாகிவிட முடியாது. ஏன் ஒரு ஊர்க்குருவியாகக் கூட மாறிவிட முடியாது.

பிறப்புகளிலேயே மனிதப் பிறப்பு உயர்ந்தது. மனிதன் மற்ற உயிர்களைவிடச் சிறந்தவன். வல்லவன் வில்லவன் என்று மனிதன் தன்னைத்தானே மெச்சிக் கொள்கிறானே! அப்படி எந்த வகையில் இவன் சிறந்தவன். உயர்ந்தவன். வல்லவன்.

எந்தக் காலமாக இருந்தாலும் நம் மனம் ஏற்றுக் கொள்ள விரும்பாத ஒரு நிகழ்ச்சி நடந்தால் உடனே நம் அனைவரின் திருவாயிலும் உதிக்கும் வார்த்தை என்ன?

“காலம் கெட்டுப் போச்சு.” என்பதுதான்.

காலம் கெட்டுப் போவதற்கு அது என்ன கத்திரிக்காய்க் கூட்டா? இல்லை சூரியன் தென் வடலாகப் பயணிக்க ஆரம்பித்திருக்கிறதா? நிலவு சுடுகிறதா? காலம் ஒருபோதும் கெடுவதில்லை. அந்தக் காலத்தில் வாழும் மனிதனே நீதான் கெட்டுவிட்டாய்.

‘கல் தட்டி விட்டது. முள் குத்தி விட்டது.’ என்கிறோமே! கல்லும் முள்ளும் என்ன காலிங் பெல் அடித்தா வந்து தட்டுகிறது இல்லை குத்துகிறது. நமது கவனக் குறைவால் கல்லைத் தட்ட வைக்கிறோம். முள்ளைக் குத்த வைக்கிறோம். ஆனால் பழியை எளிதாக அவற்றின் மீது சுமத்தி விடுகிறோம்.
நாம் செய்யும் தவறுகளுக்குப் பிறர்மீது பழி போட்டு மனதிருப்தி அடைந்து கொள்ளும் பழக்கம் இன்றல்ல நேற்றல்ல என்றோ தொடங்கி இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. இனியும் வாழும்.

காலமும் கெடவில்லை. ஞாலமும் கெடவில்லை. நமது ஞானம் கெட்டு விட்டதால் நமது கடமைகளை மறந்து காலத்தையும் நேரத்தையும் குறை சொல்லி வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்.

நமது பூமியில் நான்கு பேராட்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவை யாவை. முதலில் பொன் விளையும் பூமி என்று பெருமை கொள்ள வைக்கும் தாதுப் பொருட்கள். இவை பூமிக்கடியிலும் கடலுக்கடியிலும் ஆட்சி செய்கிறது.

உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளும் வீரியமாக வளரவும் வாழவும் வகை செய்யும் தாதுப் பொருட்கள் மனித குலத்துக்கும் செய்யும் சேவைதான் மகத்தானது. காலையில் பல் துலக்கப் பயன்படும் பற்பசையிலிருந்து இரவு பயன் படுத்தப்படும் கொசு வர்த்திச் சுருள் வரை நமது அன்றாடச் செயல்கள் அத்தனையிலும் அடிப்படைக் காரியங்களிலிருந்து ஆடம்பரக் காரியங்கள் வரை பயன்படுத்தப் படுகிறது.

ஆனால் மனிதன் இந்த தாதுப் பொருட்கள் வளம்பெற என்ன செய்கிறான்? மாறாக பூமியை துளைபோட்டுத் தூர்வாரி அனைத்தையும் அள்ளி எடுத்து அழித்து வருகிறான்.

மனிதன் வாழ்வதற்காகத் தன்னை அழித்துக் கொண்ட இந்த தாதுப் பொருட்களைவிட எந்த வகையில் மனிதன் உயர்ந்தவன்?

அடுத்து தாவரங்கள். உலக ஜீவராசிகள் அனைத்தம் உயிர்வாழ அத்தியாவாசியமான பிராண வாயுவைத் தரும் இந்த தாவரங்களின் சேவை மிகப் பெரிய தியாகம். இந்தத் தாவரங்களைச் சார்ந்துதான் மனிதனது வாழ்க்கையே இருக்கிறது என்று சொல்லலாம்.

ஆனால் மனிதனோ இவற்றின் வாழ்விடங்களையும் அழித்து தனதாக்கிக் கொண்டிருக்கிறான். அதன் பலன் பிராணவாயுவை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கிறான்.

உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும் மனிதனின் வாழ்வுக்குத் தேவையான பொருட்களைத் தன்னால் இயன்ற மட்டும் அள்ளி அள்ளித் தரும் தாவரங்கள் தான் வாழும் காலம் வரை பலன்களைக் கொடுத்து விட்டு தன்னால் இயலாது என்ற நிலையில் மடிந்து விடுகிறது.

ஆனால் மண்ணில் அறுவடை செய்து திருப்தியடையாத மனிதன் கடல் தாவரங்களையும் பெருமளவில் அறுவடை செய்து கடலையே மாசுபடுத்தி நாசம் செய்து வருகிறான்.

இந்தத் தாவரங்களைவிட எந்த வகையில் மனிதன் உயர்ந்து விட்டான்.

அடுத்து மிருகங்கள். இந்த மிருகங்கள் இல்லையேல் உலகில் உள்ள பாதி உயினிங்கள் உண்ண உணவின்றி பட்டினியாக மடிந்து விடும். தான் போகும் இடங்களில் எல்லாம் தன்னால் முடிந்த உதவிகளை உரம், உணவு, உடை என்ற பெயரில் பிற உயிர்களுக்கு தானம் செய்து விட்டு இறுதியில் தன்னால் முடியாது என்ற நிலையில் இவையும் மடிந்து விடுகின்றன.

ஆனால் மனிதன் இந்த விலங்குகளை எவ்வாறு நடத்துகிறான். வேட்டையாடி விளையாடி பெரும்பாலான விலங்கினத்தை அழித்து விட்டான். அவை வாழும் இடங்களை ஆக்கிரமித்து விட்டான். கடல் வாழ் உயினங்களை எல்லாம் அள்ளி எடுத்து பல வகை உயினங்களை இல்லாமல் செய்து வருகிறான்.

மனிதனுக்காகத் தங்களையே தியாகம் செய்யும் இந்த விலங்குகளைவிட மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்.

சரி இறுதியாக மனிதனைப் பற்றிப் பார்பபோம்.

தான் நினைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்லக் கூடிய வல்லமையும் சக்தியும் உடையவன். மற்ற உயினங்களுக்கு இல்லாத கூடுதல் இந்திரியங்களைக் (sense) கொண்டவன். மற்ற இனங்களைவிட மேலானவன் உயர்நதவன் என்று பெருமைப் படக்கூடியவன். உண்மையில் இந்தப் பெருமைக் கெல்லாம் மனிதன் தகுதி உடையவனா?

‘பிறர் மாழ தான் வாழ’ என்று அடுத்தவர் நாட்காட்டியைக் கிழிக்க நினைக்கும் சுயநல தத்துவத்தில் மிதந்து கொண்டிருக்கும் மனித சமுதாயமே நீ யாருக்காக வாழ்கிறாய்? எதற்காக வாழ்கிறாய்? அப்படி என்ன சாதனை புரிந்து விட்டாய் மனிதப் பிறவி எடுத்ததற்காகப் பெருமைப் பட்டுக் கொள்ள?

தேனீக்களும், தூக்கணாங் குருவிகளும் கட்டிய கூடுகள் மழைக்கும் புயலுக்கும் அழியவா செய்கிறது. ஆனால் பட்டம் படித்து, திட்டம் போட்டு, பணத்தைக் கொட்டி மனிதன் கட்டும் அணைக்கட்டுகளும் அடுக்கு மாடிக் கட்டிடங்களும் இயற்கைக்கு எளிதில் இறையாகி விடுகின்றன.

(சேலையில் வீடுகட்டும் கனவு கண்டால்…..)

இயற்கைச் சீற்றங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளும் திறன் கொண்டது விலங்குகளும் பறவைகளும். அதனால் அதிலிருந்து தங்களைப் பாதுகாத்தக் கொள்கின்றன. ஆனால் மனிதனோ எல்லாம் முடிந்த பின்பு இறப்பு எவ்வளவு? அழிவு எவ்வளவு? என்று கணக்கிட எழுது கோலோடு புறப்பட்டு விடுவான். பாதிக்கப் பட்டவர்கள் பயனடைகிறார்களோ இல்லையோ வேடிக்கை பார்த்தவர்கள பயனடைவது உறுதி.

இப்படிப் பட்ட மனிதன் தான் உயர்நதவன் என்று பெருமை பட்டுக் கொள்வது சரியா?

இப்படித்தான் வாழவேண்டும் என்ற இலக்கணத்தை எறிந்துவிட்டு எப்படியும் வாழலாம் என்ற ஒரு கேவலமான பாதையைத் தேர்ந்தெடுத்தல்லவா மனித சமுதாயம் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது.

உலகில் உள்ள அத்தனை ஜந்துக்களும் பிறந்த உடனேயே நடக்க ஆரம்பித்து விடுகின்றன. சில நாட்களிலேயே அவை துள்ளி ஓடவும் பறந்து திரியவும் ஆரம்பித்து விடுகின்றன. ஆனால் தான்தான் உயாந்தவன் என்று இறுமாப்புக் கொண்டிருக்கும் மனதனுக்கு எழுந்து நிற்பதற்கே பத்து மாதம் தேவைப் படுகிறது. நடப்பதற்கோ மேலும் சில மாதங்கள் வேண்டியதிருக்கிறது.

அவன் தன்னைத் தானே கவனித்துக் கொள்ளவும் தனக்கான தேவைகளுக்குப் பொருள்தேடவும் பல வருடங்களைச் செலவிட வேண்டியதிருக்கிறது. அதுவரை யாரையாவது சார்ந்துதான் வாழ்கிறான்.

இப்படிப்பட்ட வாழ்க்கைமுறை கொண்ட மனிதன் பிற ஜந்துக்களைவிட எந்த வகையில் உயர்ந்தவன்.?

ஒரு பருந்துக்கு ஆயட்காலம் எழுபது வருடங்கள். ஆனால் நற்பது வருடத்தில் அதன் அலகுகளும் கால் நகங்களும் இறக்கைகளும் பலமிழந்து விடுகின்றன. அதற்காக அந்தப் பருந்துக் கூட்டம் சோர்வடைந்து போவதில்லை. அவை தனது அலகுகள் பலமிழந்தவுடன் நேராக இமய மலைக்குப் பறந்து செல்லுமாம்.

(காக்கைகளும் பருந்துகளும் தங்களது இறுதிநாட்கள் இதுதான் தெரிந்தவுடன் இமயமலைக்கு வந்து இங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியில் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ளுமாம். இந்த இடத்தில் அவற்றின் எலும்புகள் மலைபோல் குவிந்தது கிடப்பதாகச் சொல்கிறார்கள்.)

அங்கே மலையிலே தனது அலகை மோதி மோதி உடைத்து விடுமாம். சிறிது நாளில் புது அலகுகள் வளர்ந்துவிடும். பின்பு அந்த அலகால் தனது கால் நகங்களையும் இறக்கைகளையும் கொத்தி கொத்திப் பிடுங்கி விடுமாம். அவையும் சிறிது நாளில் புதிதாக வளர்ந்து விடும். அதன் பின்பு அந்த பருந்து முப்பது வருடங்கள் வாழுமாம்.

ஆனால் மனிதன் முப்பது வயதிலே முழங்கால் வலி. நாற்பது வயதிலே நாடித் தளர்ச்சி, சர்க்கரை நோய் என்று நோய்களைத் துணையாக்கிக் கொண்டு மனதிலே வலுவிழந்து, தன்னம்பிக்கை இழந்து முடங்கிப் போகிறான். அதன் பின்பு பிறரைச் சார்ந்து வாழ்வதே அவனது வாழ்ககையாகி விடுகிறது.

இப்படிப் பட்ட மனிதன் எந்த வகையில் உயர்ந்தவன்.

சரி மனிதன் மனிதனாக வாழ்கிறானா என்றால் அதுவும் இல்லை. தனது வாழ்க்கையின் ஒவ்வொரு செயல்களிலும் பிற உயிரினங்களை ஒப்பிட்டு, உவமைப் படுத்தித்தானே வாழ்கிறான்.

சிங்கம்போல் நடை, புலிபோல் பாய்ச்சல், நரிபோல் தந்திரம், குயில் போல் குரல், கிளிபோல் பேச்சு, கொடிபோல் இடை, மலர் போல் அழகு, மீன் போல் கண்கள், சங்குபோல் கழுத்து என்று மண்ணில் தோன்றிய ஓருயிர்த் தாவரத்திலிருந்து விண்ணில் தவழும் நிலவு வரை தன்னை உவமைப் படுத்தி, ஒப்பிட்டு வாழும் இவன் அவைகளைவிட உயர்நதவனா?

பூமிக்கடியிலும் கடலுக்கடியிலும் இருக்கும் தாதுப் பொருட்களை எல்லாம் வெட்டி எடுத்து வெறுமையாக்கி, தாவரங்களை அழித்து காடுகளை வீடுகளாக்கி, சோலைகளை பாலைநிலங்களாக்கி, விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடி தீர்த்துக் கொண்டிருக்கும் மனிதன் இறுதியில் மனிதனே மனிதனை வேட்டையாடும் இழி நிலைக்கு அல்லவா மாறிவிட்டான்.

மனிதன் மொழியைப் பறவைகளும் விலங்குகளும் அறிந்து கொள்ளும் திறனைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மனிதன் அவற்றை அடிமைப்படுத்தி அழிக்கத் தான் நினைக்கிறான். அரசன் சாலமன் போல் பறவைகள் மொழி படித்திருந்தால் அவற்றின் வலியையும் உணர்ந்து அவற்றின் மூலம் பாடம் கற்றுக் கொண்டிருப்பானோ!

இப்படி உயிரற்ற தாதுப் பொருட்களைவிட, இடம்பெயரா தாவரங்களைவிட, விலங்குகளைவிட மனிதன் உயர்நதவனா? இல்லை. உறுதியாக இல்லை.

மனிதர்களே! நமக்காக வாழ்ந்து மடியும் இந்த பிற ஜீவன்களை ஒரு முறை கனிவுடன் திரும்பிப் பாருங்கள். அவை நமக்கு வாழ்க்கையின் பல பாடங்களை நமக்குக் கற்றுத் தரும்.

கனிஷ்கா, தென்காசி.